விருதுநகர்: ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் – 2026 முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்(Start Run, Stop Drugs) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்.
பின்னர், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும், விழிப்புணர்வு வாகனத்தையும்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தமிழக இளைஞர்களின் ஆற்றலினை மேன்படுத்திடவும், தீய மற்றும் விரும்பத்தகாத போதை போன்ற பழக்கவழக்கங்களுக்கு ஆட்படாமல் பாதுகாத்திடவும், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்திடவும், சிறந்த சமூகம் மற்றும் வளமான மனிதவளத்தினை உருவாக்கிடும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், திட்டங்களையும் ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில், போதையில்ல தமிழகம் என்ற நிலையினை எய்திடவும் இதுகுறித்த விழிப்புணர்வினை அனைத்து தரப்பு மக்களிடவும் ஏற்படுத்திடும் பொருட்டு விழிப்புணர்வு ஓட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

போதைப்பொருள் பழக்கமானது சுய ஒழுக்கத்தினை பாதிப்பதோடு சமூகத்தின் வளர்ச்சியினையும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கிறது. இதனை, கட்டுப்படுத்திடவும், தவிர்த்திடவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் மூலம் கல்வி, பாதுகாப்பு, உயர்கல்வி ஆகியவற்றை மேம்படுத்திடவும் பாலின சமத்துவத்தினையும் உறுதி செய்ய செயல்படுத்தப்படுகிறது.
குழந்தைத் திருமணம் இல்லா விருதுநகர் என்பதனை இலக்காக கொண்டு சிலம்பம் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கென்று விழிப்புணர்வு சிலம்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களை பாதுகாத்திட மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் 5 கி.மீட்டர் தூரம் ஓடிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி கே.ஜெயக்குமார், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் பி.செல்வம், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.கார்த்திக், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமாரமணிமாறன், மாவட்ட சமூக நல அலுவலர் திலகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.