திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் என்.என்.பேட்டை டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தாராபுரம் வர்த்தக கழகத்தின் சார்பில் வணிகர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தாராபுரம் வர்த்தக கழகத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவருமான ஞானசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள் மற்றும் பெண்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, தமிழக அரசையும் டாஸ்மாக் நிர்வாகத்தையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தாராபுரம் நகரின் மிக நெரிசலான பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் என்.என்.பேட்டை டாஸ்மாக் கடை இன்னும் செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானசேகர் கூறியதாவது:- தாராபுரம் நகரின் பிரதான வணிக மற்றும் குடியிருப்பு பகுதியாக விளங்கும் என்.என்.பேட்டை வீதியில், டாஸ்மாக் மதுபானக் கடை எண் 3438 பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் அப்பகுதி வணிகர்கள், குடியிருப்புவாசிகள் மற்றும் பெண்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மதுபானம் அருந்திவிட்டு வெளியே வரும் சிலர் காலி மதுபான பாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதுடன், போதையில் தகாத வார்த்தைகள் பேசுவதும், வழியாக செல்லும் பெண்களிடம் அவதூறாக நடந்து கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், மதுபோதையில் ஏற்படும் தகராறுகளால் அடிக்கடி கைகலப்புகள் நிகழ்கின்றன. சில நேரங்களில் கண்ணாடி பாட்டில்கள் வீசப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

அதேபோல், வணிக நிறுவனங்களின் முன்பாக படுத்துக்கொள்வது, சிறுநீர் கழிப்பது, வாந்தி எடுப்பது, உணவுப் பொட்டலங்களை அங்கேயே கொட்டிச் செல்வது போன்ற செயல்களால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் இந்த அவல நிலையை அனுபவித்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த மதுபானக் கடையிலிருந்து சுமார் 20 அடி தொலைவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும், 200 மீட்டர் சுற்றளவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில், சௌண்டம்மன் கோவில், பைரவர் கோவில், ராஜகாளியம்மன் கோவில், துர்க்கையம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி, மதரஸாக்கள், பள்ளிவாசல்கள், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளிட்ட மத நிறுவனங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன. நகராட்சி நடுநிலைப்பள்ளி, உடுமலை ரோடு மதரஸா ஆரம்பப்பள்ளி, என்.சி.பி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாராபுரத்தின் பெருமையாக விளங்கும் புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் என்.என்.பேட்டை விளங்கி வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் பெண்கள் இந்த வழியாக பயணித்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தனியாக செல்ல வேண்டிய சூழ்நிலையில் அச்ச உணர்வுடன் பயணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் வர்த்தக கழக நிர்வாகிகள், வணிகர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related

“மேகதாது தனித்தீர்மானம்: சட்டப்பேரவை விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு அதிமுக வெளிநடப்பு”