தேனி: வைகை அணையை தூர்வார மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். 

மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டம் முழுவதும் போதுமான மழை பெய்யாததாலும், வைகை அணையில் இருந்து விவசாயம் மற்றும் பாசனம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 20 அடியாக சரிந்தது. இதனால் வைகை அணையில் இருந்து செயல்படுத்தப்பட்ட அனைத்து கூட்டு குடிநீர் திட்டங்களும் அடியோடு நிறுத்தப்பட்டது. 

இதனால் வைகை அணையை நம்பி உள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீரின் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  வைகை அணை கட்டப்பட்டு 68 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தூர்வாரப்படாததால், அதில் பெருமளவு மணல் மற்றும் வண்டல் மண் படிந்துள்ளன. இதனால் அணையின் நீர் கொள்ளளவு 18% முதல் 20% வரை குறைந்துள்ளது. 

இந்த நிலையில் வரும் காலங்களில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க வைகை அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து வைகை அணைக்கு வந்த தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்  வைகை அணையை தூர் வருவது குறித்த ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், வைகை அணை தென் தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. அணைப்பகுதிகளில் சுமார் 15 அடி வரை தேங்கியுள்ள வண்டல் மண் திட்டுகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இது தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வைகை அணையை தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதனை வணிக ரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ யாராவது கடத்த முயன்றால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

அதேபோல், ஆண்டிபட்டி பகுதியில் நிலுவையில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் புறவழிச்சாலை திட்டங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் விதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாற்றுப் பாதைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்குத் தங்கு தடையின்றி நலத்திட்டங்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Related

“மேகதாது தனித்தீர்மானம்: சட்டப்பேரவை விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு அதிமுக வெளிநடப்பு”