தேனி: உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான தமிழ் திரையுலகின் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் உடல், தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அவரது சொந்தப் பண்ணைத் தோட்டத்தில் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். 

அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, வியாழக்கிழமை காலை முதல் பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பாரதிராஜாவின் உடலுக்குத் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதில் நடிகர் வடிவேலு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, பாரதிராஜாவின் உடல் அருகே கதறி அழுது தனது வேதனையை வெளிப்படுத்தினார். கவிஞர் வைரமுத்து ஆளுயர ரோஜா மாலையை அணிவித்து மௌனமாக கண்ணீர் வடித்தார். நடிகை ராதிகா, நிரோஷா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் ராம், பார்த்திபன், பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி மற்றும் சித்ரா லட்சுமணன், சினேகன், விக்னேஷ், கருணாஸ், தாமு, நிழல்கள் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இறுதிவரை உடலின் அருகே அமர்ந்திருந்தனர்.

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் மலர் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசு சார்பில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மக்களின் கண்ணீர் கடலில் அவரது இறுதி ஊர்வலம் அல்லிநகரத்தில் தொடங்கியது.  

தன் திரைப்படங்களில் கிராமத்து கலாச்சாரத்தை அச்சு அசலாகக் காட்டிய பாரதிராஜாவிற்கு, தென்னகப் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. மரக்கால் நிறைய நெல் வைத்தல், பிறந்த வீட்டு மற்றும் புகுந்த வீட்டு கோடி வழங்குதல், நீர் மாலை எடுத்தல் போன்ற கிராமியச் சம்பிரதாயங்கள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டன.

தொடர்ந்து, பச்சை மூங்கில் மற்றும் தென்னங்கீற்றால் செய்யப்பட்ட பாடையில் பாரதிராஜாவின் உடல் காவல்துறையினரின் மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. இயக்குநர் பாரதிராஜா இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி  மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசி மோகன் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணின் கலாச்சாரத்தைத் திரையில் காட்டிய மாபெரும் கலைஞனுக்கு, தென் தமிழகப் பாரம்பரியப்படி திரையுலகினரும் பொதுமக்களும் கண்ணீருடன் இறுதி விடை கொடுத்துள்ளனர். 

Related

“மேகதாது தனித்தீர்மானம்: சட்டப்பேரவை விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு அதிமுக வெளிநடப்பு”