தஞ்சாவூர்: அதிமுகவை ஒன்றிணைக்க வலியுறுத்தி,கட்சியின் நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் பூக்கடை மகேந்திரன்.

இவர், அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலராக உள்ளார். அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட அவர்,

"மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க வேண்டும், நமது இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் எனக்கு மன வேதனை தருகிறது. என்னைப் போன்ற பல இளைஞர்களின் மனதிற்கு ரொம்ப வேதனையாக உள்ளது. எனது இறப்பிற்குப் பிறகாவதுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் இணைந்து அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும்.

அனைத்து தொண்டர்களும் கழக நிர்வாகிகளும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும், இதுவரை என்னோடு பயணித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

என்னுடைய உடலுக்கு நான் வணங்கும் மனித தெய்வம் எடப்பாடியார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினால் என்னுடைய ஆத்மா சாந்தி அடையும், நன்றி விடைபெறுகிறேன்" என வீடியோ வெளியிட்டு திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில், மகேந்திரனின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த அதிமுக தொண்டர் மகேந்திரன் உடலுக்கு, இறுதி மரியாதை செலுத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பனந்தாள் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு இபிஎஸ் அளித்த பேட்டியில், ”மகேந்திரன் குழந்தையின் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரையிலான கல்விச் செலவு முழுவதையும் அதிமுக ஏற்கும்.

அவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 30 லட்சம் இழப்பீடும், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

Related

“மேகதாது தனித்தீர்மானம்: சட்டப்பேரவை விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு அதிமுக வெளிநடப்பு”