சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் விசித்திரத்தை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றும் பெருமான்மையுடன் ஆட்சி அமைக்க இயலவில்லை.திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியும் மீண்டும் முதல்வராக முடியவில்லை. அதைவிட அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகவும் முடியவில்லை. இது தான் விசித்திரமான தேர்தல் முடிவாகும். 

இதற்கிடையே தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சருக்கான பாதுகாப்பை அரசு அளித்துள்ளது. 

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தனிக் கட்சியாக 107 இடங்களை மட்டுமே  த.வெ.க. வென்றுள்ளது. இந்த இடங்களை வைத்து தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.

அதிலும் த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருக்கிறார். அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே அதில் ஒரு தொகுதி குறைந்து 106 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அடுத்ததாக சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டும். அதிலும் ஒரு சீட் குறைந்து 105-ஆக குறையும்.

மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர், தி.மு.க. தலைவர்.

எனவே த.வெ.க. கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 13 இடங்கள் வேண்டும். தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 5 இடங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வீதம் 4 இடங்களும், தே.மு.தி.க.விற்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.விற்கு 5 இடங்கள், பா.ஜனதா கட்சிக்கு 1 இடம், அம.மு.க.விற்கு 1 இடம் கிடைத்துள்ளன.  இரண்டு கூட்டணியிலும் உள்ள (தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை தவிர்த்து) மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.விற்கு கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும். அதன்படி கணக்கிடும்போது 105+21 என்றளவில் 126 இடங்களை பெற முடியும்.

ம.தி.மு.க.விற்கு 2 இடங்கள் கிடைத்திருந்தாலும், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருப்பதால், அவர்கள் த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க முடியாது.

இருந்தாலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பிரிந்து வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

எடப்பாடி கே.பழனிசாமி,முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர்.

 இந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நாளை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வரவுள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு 2 வழிகளில் ஒன்றை கவர்னர் தேர்வு செய்வார். அதன்படி, அதிக இடங்களில் வென்றுள்ள கட்சியான த.வெ.க. தலைவரை அழைத்து, பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பை வழங்குவார். இதற்கு ஒரு வாரம் வரை அவகாசம் தரப்படலாம்.

இல்லாவிட்டால், மற்றொரு வாய்ப்பாக, த.வெ.க. தனக்கு ஆதரவு தரும் கட்சிகளின் கடிதங்களை அந்தந்த கட்சிகளிடம் இருந்து பெற்று, கவர்னரிடம் வழங்க வேண்டும். 118 இடங்களுக்கு மேல் சீட் கிடைத்திருந்தால், ஆட்சி அளிக்கும் உரிமையை த.வெ.க.வுக்கு கவர்னர் வழங்குவார்.

ஆனால் அந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைக்காமல் போனால், த.வெ.க.விற்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காது. எனவே ஆட்சியை அக்கட்சி அமைக்க முடியாமல் போகும். வேறு ஆதரவுகள் கிடைக்காமல் போய்விட்டால், 2-வதாக அதிக இடங்களை வென்றுள்ள கட்சியான தி.மு.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் வாய்ப்பளிப்பார். அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால்  6 மாதங்கள் கவர்னர் ஆட்சியை தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதன் பின்னர் அடுத்த சட்டமன்ற தேர்தல் முழுமையாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

Related

“தண்ணீர் பாட்டில் வைக்கலாமே? சட்டப்பேரவையில் சுவராஸ்யம்!”