சென்னை: பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில ஊடக பொறுப்பாளர் விஜயலட்சுமி அரவிந்த் பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார். விரைவில் தனது ஆதரவாளர்களையும் தவெகவில் இணைக்க உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் (தமிழ்நாடு) மகளிர் அணியில் மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாநில ஊடகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர் விஜயலட்சுமி அரவிந்த். இவர் பாஜகவிலிருந்து விலகுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பதவி விலகம் கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக்கடிதத்தில்,
பாரதிய ஜனதா கட்சியின் (தமிழ்நாடு) மகளிர் அணியில் மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாநில ஊடகப் பொறுப்பாளராகவும் பணியாற்றி வரும் நான், விஜயலட்சுமி அரவிந்த், அப்பதவிகளிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் உடனடியாக விலகுவதாக இக்கடிதத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சிக்குச் சேவையாற்றியதும், மாநிலம் முழுவதும் கட்சியை வலுப்படுத்தப் பங்காற்றியதும் எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். எனது பதவிக்காலத்தில், கட்சிக்காக நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்துள்ளேன்; மேலும் பெண்கள் மத்தியிலும், பல கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் கட்சியை மிகவும் துடிப்பானதாக மாற்றியுள்ளேன்.
மாநிலத் தலைமை என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும், எனது பதவிக்காலத்தில் அனைத்துப் பிரிவுத் தொண்டர்களும் (காரியகர்த்தாக்கள்) அளித்த ஒத்துழைப்பிற்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, இப்பொறுப்புகளிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கௌரவமிக்க தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களின் வழிகாட்டுதலுக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இன்னும் சில நாட்களில் தனது ஆதரவாளர்களையும் தவெகவில் இணைக்க இருப்பதாக விஜயலட்சுமி அரவிந்த் தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.