சென்னை: திருவொற்றியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ செந்தில்குமார், ஆடம்பர வாகனங்களைத் தவிர்த்து அரசு பேருந்தில் சாதாரண மக்களுடன் பயணம் செய்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த பின்னர், தமிழகம் முழுவதும் மக்கள் சேவையில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதன் நிர்வாகிகளும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், தனது வழக்கமான கட்சிப் பணிகளுக்குச் செல்ல சொகுசு கார்கள் எதையும் பயன்படுத்தாமல், அரசு பேருந்தில் பயணம் செய்தார்.
பேருந்தில் பயணித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களின் குறைகள், தேவைகள் மற்றும் அப்பகுதியின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"மக்களுக்கான அரசியலைச் செய்யும்போது, மக்களுடன் பயணிப்பதே உண்மையான எளிமை" என்று தவெக தொண்டர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.
அரசு பேருந்தில் சாதாரண பயணியாக அமர்ந்து சென்ற அவரது புகைப்படங்களை சக பயணிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததையடுத்து, அந்த படங்கள் வேகமாக பரவி வருகின்றன.
அரசியல்வாதிகள் ஆடம்பர வாகனங்களில் மட்டுமே பயணிப்பார்கள் என்ற பொதுவான எண்ணம் நிலவும் நிலையில், எம்எல்ஏ செந்தில்குமாரின் இந்த எளிமையான செயல்பாடு பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
மக்களோடு இணைந்து, மக்களின் குரலை நேரடியாகக் கேட்கும் இந்த எளிய அணுகுமுறை, மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நல்ல முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.