சென்னை: தமிழ்நாட்டிற்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூபாய் 1,000 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "வருவாய்த் துறையில் தேங்கிக் கிடக்கும் பணிகள் என்ன? மக்களுக்கான பணிகளை விரைந்து எவ்வாறு செய்வது? என்பது குறித்து வருவாய்த் துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மக்களுக்கான சாதி சான்றிதழ் விரைவில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. சாதி சான்றிதழ் விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதே போல் குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை உடனுக்குடன் வழங்குவது தொடர்பாகவும், இவை அனைத்தும் எளிதில் மக்களுக்கு எவ்வாறு கிடைக்க செய்வது? என்பது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இணையதளம் மூலம் சான்றிதழ்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் சான்றிதழ்களை ஐந்தே நாட்களுக்குள் வழங்க கிராம அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு நிலங்கள் எவ்வளவு இருக்கிறது? என்பதை ஆய்வு செய்து அந்த நிலங்களை எவ்வாறு பயன்படுத்துவது? என்பதை முடிவுச் செய்யவுள்ளோம்.
பத்திரப்பதிவில் இருக்கும் தேக்கங்களை சரி செய்து, பட்டாக்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை மாஞ்சோலையில் கூடுதலாக மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் கூடுதல் மழைப்பொழிவு இல்லை. குறைந்த மழைப்பொழிவு காரணமாக குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இரண்டே மாதத்திற்குள் துறை சார்பில் எந்தெந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். பேரிடர் மேலாண்மை துறைக்கு தற்போது தேவைப்படும் 1,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. முதலமைச்சர் நாளுக்கு நாள் எடுக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டு வரலாற்றில் இடம் பெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும், சொன்னதை செய்கிறோமா? என்ற அடிப்படையில் செயல்பாடுகளை தான் முக்கியமாக நினைக்கிறார்.
மாரிதாஸ் எந்த விதிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சட்டரீதியாக எனக்குத் தெரியவில்லை. பத்திரிகைக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். பத்திரிகை சுதந்திரம் தனிப்பட்ட விமர்சனம் இல்லாமல், மக்கள் வளர்ச்சியில் இருக்க வேண்டும். இண்டியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியுள்ளது. தவெகவின் கொள்கை முடிவுகள் என்ன? என்பதை முதலமைச்சர் தெரிவிப்பார். பேரிடர் மீட்புப் படையினர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தயாராக உள்ளனர்.
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் நிலச்சரிவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன. மூன்றே மாதத்தில் வருவாய்த்துறையின் வேகம் ஜெட் வேகத்தில் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.