சென்னை: சென்னையில் திடீரென ஏற்படும் மின்தடையை சரி செய்யும் வகையில் 500 பேர் கொண்ட 10 சிறப்பு குழுக்கள் 125 நடமாடும் மின் ரோந்து வாகனங்களை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.
விழாவில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் ஆனால் அதையெல்லாம் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் 10 சிறப்பு குழுக்கள் மற்றும் 125 நடமாடும் ரோந்து வாகன சேவைகளை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ஒரு சில இடத்தில் ஒரு சில நபர்கள் வேண்டுமென்றே பியூஸ் புடுங்குகிறார்கள்.போர்க்கால அடிப்படையில் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறோம்.இன்று சென்னை முழுவதும் மின் தடைக்கு உடனடி தீர்வு வழங்கக்கூடிய வகையிலான 125 ரோந்து வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன, இவை இரவு முழுவதும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்,எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ அனைத்தும் மின்னகத்திற்கு தகவல்கள் கொடுக்கப்படுகின்றன.பெரிய வாகனங்கள் செல்ல முடியாத இடத்திற்கு ஆட்டோக்கள் மூலம் சென்று மின்தடைக்கு நிவர்த்தி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத விஷயங்கள் மின்துறையில் ஒரு சில நாட்களாக நடைபெறுகிறது.டிரான்ஸ்பார்மர் எல்லாம் தீப்பிடித்து எரிகின்றன.125 வாகனங்கள் 500 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது,
இதை கண்காணிக்க 10 உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சாரத் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் இல்லை.மின் சாதனங்கள் தான் பழுதாகின்றன தவிர, மின்தட்டுப்பாடு இல்லை.அரும்பாக்கம் கொடுங்கையூர் பெரம்பூர் வில்லிவாக்கம் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திரும்பத் திரும்ப இது போன்ற பிரச்சனைகள் நடைபெறுகிறது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் ஆனால் அதையெல்லாம் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மின் தட்டுப்பாட்டை தடுக்க மின் ரோந்து வாகனங்கள் தற்காலிகமாக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.