சென்னை: இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை நேற்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. கேள்வி நேரம் கிடையாது என்பதால் பூஜ்ஜிய நேரத்தில் விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் காரசாரமாக பேசி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் நிறைவேற்றப்பட்ட திருத்த தனித்தீர்மானத்தை எதிர்த்துர் பேசினார்.
இந்நிலையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நமது மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நதிநீர் உரிமைகளையும் காப்பதில் இந்த அரசு துளியும் சமரசம் செய்து கொள்ளாது என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நமது மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நதிநீர் உரிமைகளையும் காப்பதில் இந்த அரசு துளியும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இப்பேரவையில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் அவர்கள் மேகதாது பிரச்சினையை சமீபத்தில் எழுப்பிய உடனேயே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 25.05.2026 அன்று அரசு தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, இப்பிரச்சனை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்பற்றி அறிவுறுத்தினார்கள். அத்துடன் நிற்காமல், நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள், அடுத்த நாளே (26.05.2026) தனது கடிததத்தின் வாயிலாகவும், 27.05.2026 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தும், மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்க வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தினார்கள். தமிழக முதல்வர் அவர்கள் 25.05.2026 அன்று உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக புது டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் மேகதாது திட்டத்தை எதிர்த்து 27.05.2026 அன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், 18.06.2026 அன்று, அமைச்சர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் காவிரி தொழிநுட்பக் குழு மற்றும் பன் மாநில நதிநீர்ப் பிரிவின் தலைவர் ஆகியோருடன் ஆலோசித்த பின்னர், மேகதாது திட்டத்தை எதிர்த்து ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம் எனவும், அதற்கு அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவைக் கோரலாம் எனவும் முடிவெடுத்தார்கள். காவிரி நதிநீர் விவகாரத்தில் ஒருமனதாக
இயற்றப்பட்ட தீர்மானத்தில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் 04.03.2026 அன்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு மேகதாது அணை விவகாரம் குறித்து ஒரு புதிய நடுவர் மன்றம் அமைக்க முன்மொழிவுகள் அனுப்பியது குறித்தும் தீர்மானத்தில் சேர்க்க கோரிக்கை வைத்தார். அதன்படி, இப்பேரவையில், 19.06.2026 அன்று நடுவர் மன்றம் அமைக்குமாறு வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை அன்றே தனது நேர்முகக் கடிதம் வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்கள், மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு, தமிழர் நலன் கருதி இந்த அரசு, மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆலோசனைகளின்படி, மேகதாது திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால், சிலர் நடுவர் மன்றம் அமைக்குமாறு கோருவது சரியான அணுகுமுறையல்ல என கருதுகின்றனர்.
சில தரப்பினர் பரப்பி வரும் தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நமது அரசின் நேர்த்தியான அணுகுமுறை பற்றி இந்த மாமன்றத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த நவம்பர் 13, 2025 அன்று, மேகதாதுக்கு எதிராக நாம் தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் மேகதாது அணைத் திட்டம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது" எனக் கூறி தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பின் para 29-இல், மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டது. இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, கர்நாடகாவோ அல்லது கேரளமோ தன்னிச்சையாக புதிய, அனுமதிக்கப்படாத திட்டங்களைக் கையில் எடுத்துவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். டிசம்பர் 2025-இல், ஒன்றிய அரசு தன்னிச்சையாகக் “காவிரி நீர்வளத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
மேலும், கடந்த மே 7, 2026 நாளிட்ட ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் கடிதம் மூலம், மத்திய நீர்வள ஆணையம் CWC) கர்நாடகாவின் மேகதாது திட்ட அறிக்கை (DPR) மீது தனது தொழில்நுட்பக் கருத்துக்களை வழங்கி, அடுத்தகட்ட நகர்வுக்குக் காத்திருப்பது அம்பலமாகியுள்ளது. இருப்பினும், இந்த வழிகாட்டுதல்களை கடுமையாக எதிர்த்தும் தமிழ்நாடு அரசு 09.06.2026 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே குறிப்பிட்டவாறு, நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அண்மையில் (27.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, மேகதாது அணை விவகாரம் குறித்த தமிழ்நாட்டின் நியாயமான கவலைகளை குறிப்பிட்டு, கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும், நடுவர் மன்றத் தீர்ப்புகளுக்கு முரணாகவும் மேகதாது பகுதியில் எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் அனுமதிக்கக் கூடாது என்று அக்கோரிக்கையில் மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2018 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட்ட 50% நம்பகத்தன்மை கொண்ட 740 டி.எம்.சி தண்ணீர் பங்கீட்டை எந்தவொரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது. எனவே, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய 177.25 டி.எம்.சி- யில் எந்த மாற்றமும் ஏற்படாது. 1956-ஆம் ஆண்டு நதிநீர் தாவா சட்டத்தின் பிரிவு 4 (1)-ன்படி ஏற்கெனவே தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் திறக்க சட்டத்தில் இடமில்லை.
2018 தீர்ப்பில் "உபரி நீர்" (Surplus Water) குறித்து துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. இதனைப் பயன்படுத்தி, கர்நாடகா உச்ச,நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அசல் வழக்கைத் தொடர்ந்தது. 1956 நதிநீர் தாவா சட்டத்தின்படி, இத்தகைய புதிய நதிநீர்ப் பிரச்சினைகளை ஒரு நடுவர் மன்றத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்பதே உச்ச நீதிமன்றத்தில் நமது வாதமாகும்.
காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கைய (DPR) நிராகரித்துவிட்டது என்று கூறுவது முற்றிலும் தவறானது. காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கைய (DPR) நிராகரிக்கவில்லை. மாறாக, எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய,நீர்வள ஆணையத்திடமே (CWC) திருப்பி அனுப்பியுள்ளது. எனவே ஆபத்து இன்னும் நீங்கவில்லை.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒன்றிய அரசும், கர்நாடகாவும் புதிய வழிகாட்டுதல்களின் கீழ் மேகதாது திட்டத்தை மறைமுகமாக மேற்கொள்ள முற்படும் வேளையில், நாம் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அந்த வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களிடம் வழங்கிய கோரிக்கையின் தொடர்ச்சியாகவும், ஒன்றிய அரசின் தன்னிச்சையான நகர்வுகளை முடக்குவதற்கும், உபரி நீர் மீது தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கும் ஒரு மிகச்சிறந்த அணுகுமுறையாகவே புதிய நடுவர் மன்றக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பேரவைக்கு மிக உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிலளித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.