சென்னை : எங்க சின்ன ராசா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், சென்னையில்  இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பிய பாக்யராஜ். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். நடைபயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்  உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.

இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட பாக்யராஜ். தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர்.

தனது குரு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார். புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கி உள்ளார். பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் அசத்தினார்.

இயக்குனர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களுக்குள்ளேயே அவரது சிஷ்யரான பாக்யராஜ் மறைந்து இருப்பது திரையுலகில் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாக்யராஜ் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரையுலகினர் ஏராளமான பேர் அஞ்சலி செலுத்த துவங்கி உள்ளனர். பாக்யராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

Related

“கிருஷ்ணகிரி  4 மசார் தர்காவில் 13-ம் ஆண்டு மொகரம் விழா”