சென்னை: சென்னை திமுக வடக்கு மாவட்டம் சார்பில் இராயபுரம் மேற்கு பகுதி தி.மு.க மாணவரணி பகுதி துணை அமைப்பாளர் பா.சக்திதாசன் ஏற்பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1003 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமையில் சென்னை நார்த்வால் ரோட்டில் உள்ள முதல்வர் திருமண மாளிகையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 

இந்த நிகழ்வில், திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இராயபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, திமுக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் டாக்டர். யாழினி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., நாம் இங்கே தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்த நாளை கொண்டாட இந்த அரங்கத்திலே குழுமி இருக்கிறோம். வேளாங்கண்ணி அவர்களும் நம்முடைய சக்தி அவர்களும் ஏறத்தாழ ஆயிரத்து முன்னூறு பேருக்கு மேல் நலத்திட்டங்கள் தருவதற்காக ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.

நமக்கு வேளாங்கண்ணி அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும், உங்களுக்கெல்லாம் அவர்களை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை,தொடர்ந்து கழகத்திற்காக உழைக்கக்கூடிய எல்லாருக்குமே முன்னுதாரணமாக இருக்கக்கூடிய எந்த போராட்டமாக ,பொதுக்கூட்டமாக ,ஆர்ப்பாட்டமாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் முதல் வரிசையில்  நின்று அங்கே குரல் கொடுக்கக்கூடிய அதற்காக பாடுபடக்கூடிய ஒருவராக வேளாங்கண்ணி அவர்கள் எப்பொழுதுமே இருப்பார்கள்.

நம்மைப் பார்த்து இது குடும்பம் நடத்தக்கூடிய கட்சி என்கிறார்கள். வேளாங்கண்ணி இந்த இயக்கத்தில்   தன்னை இணைத்துக் கொண்டவர். அவருக்கு அடுத்தபடியாக அவருடைய பிள்ளைகள், அவர்களுடைய பிள்ளைகள் என்று வாழையடி வாழையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர வேறு எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லக்கூடிய ஒரு குடும்பம்,இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய குடும்பம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

எங்களுடைய மகளிரணி கூட்டத்திலே ஒரு சகோதரி சொன்னார், எங்கள் வீட்டில்  கூட கேட்பார்கள் , கட்சி கட்சின்னு உயிர விடுறியே கட்சி உனக்கு என்ன பண்ணிருச்சுன்னு. நான் ஒரு முறை திருச்செந்தூர் கோயிலுக்கு எங்கள்  குடும்பத்தோடு வண்டியில்  சென்றோம். அந்த கோவிலுக்கு செல்லும்  வழியில்  எங்களுக்கு ஒரு  விபத்து நேர்ந்தது. அந்த நேரத்தில்  எங்களுக்கு உதவி செய்வதற்கு யாரை அழைக்கவேண்டும் என்பதும் தெரியவில்லை,யாரும் வரவில்லை.

அதனால் நாங்கள் முதலில் அழைத்தது நம்முடைய கழக  தோழர்களை, உடன்பிறப்புகளை,மகளிரணி மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்தோம். அவர்கள் ஓடோடி வந்து எங்களை மருத்துவமனையில் சேர்த்து எங்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்தார்கள்,மேலும்  என்னுடைய மகனுக்குக்  கை முறிவு ஏற்பட்டது ,அதற்கான  வைத்தியத்திற்கெல்லாம் கூட இருந்து எங்களை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தவர்கள் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள்.

அதிலிருந்து என் பையன் என்னைப்  பார்த்து அந்த கட்சி உங்களுக்கு என்ன செய்தது என்ற  கேள்வியை  கேட்பதில்லை.இனி வரும் காலங்களில் இந்த கட்சியை விட்டு போக வேணடாம் என்று என் பையன் ஒவ்வெரு நாளும் கூறுகிறார் என்று அந்த சகோதரி சொன்னார்.இதைத்தான் தலைவர் கலைஞரிடம் ஒரு முறை கேட்டபொழுது "உங்க குடும்பம் அப்படின்னா" , என்னுடைய குடும்பத்தை ஒரு புகைப்படத்திற்குள் அடைத்து விட முடியாது,தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் என் குடும்பம் இருக்கு என்று சொல்லிய தலைவன்தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

மற்றவர்கள் சகோதரர்களே தோழர்களே என்று அழைக்கும்பொழுது அங்கே பெண்களுக்கு இடம் இருப்பதில்லை,ஆனால்  தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்பே என்று அழைக்கும்பொழுது அத்தனை பேரையும் சகோதரர்கள்,சகோதரிகள்,அண்ணன்,தங்கை என்று அத்தனை குடும்பத்தினரையும் ஒன்றாக இணைத்துச் சொல்லக்கூடிய ஒற்றை மந்திரச் சொல்லை சொன்ன தலைவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

எல்லாரும் ஒன்று என்று  நினைத்த தலைவர், பெண்கள் படிக்க வேண்டும் என்று நினைத்தவர்.இங்க மேடையிலே இருக்கக்கூடியவர்கள் எல்லாரும் பெண்களுக்காக எத்தனை திட்டங்களை செய்கிறார்கள், இன்றைக்கு யாழினி அவர்கள் பேசும்பொழுது குறிப்பிட்டு சொன்னார்களே 42 சதவீதம்,யாழினி மட்டுமின்றி  இன்று முதலமைச்சராக இருக்கக்கூடிய திரு.விஜய் அவர்கள் டெல்லியில் நடந்து  நிதி ஆயோக்கில்  பேசும்பொழுது பெருமையாக சொல்கிறார் 42 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில உழைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.அந்த உழைக்கக் கூடிய பெண்களை உருவாக்கிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் திருமண உதவித் திட்டமே கொண்டுவரப்பட்டது.கிராமம்களில் கல்லூரிகளை உருவாக்கி அங்குள்ள சாதாரண குடும்பத்தில்  இருக்கக் கூடிய ஆண்களும் பெண்களும் படிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.

இன்றைக்கு  42 சதவீதம் பெண்கள் உழைக்கக்கூடியவர்கள் தமிழ்நாட்டில்  இருக்கிறார்கள் என்று இந்த அரசு பெருமையாக பேசுகிறது என்றால் அதற்கு அடித்தளமிட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.அங்கே சென்று  பெருமையாக சொல்லக்கூடிய அத்தனை திட்டங்களையும் கொண்டுவந்தது நம் திராவிட மாடல் ஆட்சி தலைவர் கலைஞர்,அது மட்டும் இல்லாமல், எத்தனையோ முன்மாதிரித் திட்டங்கள் அவர்கள் காலம் தொட்டு நாம் கொண்டு வந்திருக்கக் கூடிய திட்டங்கள்தான்.

அரசியலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் யார் வேண்டுமானாலும் திட்டங்களைக் கொண்டு வரலாம். ஆனால், இந்த சமூகத்தில் யாரும் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று சொல்லக்கூடிய திருநங்கைகளுக்கென தனி நல வாரியத்தை உருவாக்கியவர் தலைவர் கலைஞர்.

நான் நாடாளுமன்றத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். திருநங்கைகளுக்கு முதன்முதலில் அங்கீகாரம் அளித்த மாநிலம் எது என்றால், அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற தமிழ்நாடுதான்.

அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது, பாஸ்போர்ட் எடுக்க முடியாது, கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாது. பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், அவர்கள் அனுபவித்த கொடுமைகளையும் சோகக் கதைகளையும் கேட்டால் மனம் பதறிவிடும். உயிர் பிழைப்பதா இல்லையா என்ற அச்சத்துடன், நெருப்பில் நடந்து செல்வதைப் போன்ற வேதனையைச் சந்தித்துதான் அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 

அது எவ்வளவு பெரிய ரண வேதனை என்பதை அவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். அந்த அறுவைச் சிகிச்சையை பாதுகாப்பாக அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள வழிவகுக்கும் வகையில் சட்டங்களையும் நடைமுறைகளையும் மாற்றி, அவர்களின் உயிரைக் காத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

வாக்கு அரசியலைப் பற்றி கவலைப்படாதவர் தலைவர் கலைஞர். அதையும் தாண்டி, இந்த சமூகத்தில் யார் யாரின் மீது யாரும் தங்களது பார்வையைத் திருப்பவில்லையோ, அந்தப் பிச்சைக்காரர்களாக இருக்கட்டும், தொழுநோயாளிகளாக இருக்கட்டும், மாற்றுத் திறனாளிகளாக இருக்கட்டும், அவர்களைப் பற்றிக் கவலைப்பட்ட தலைவர் கலைஞர்.

தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்கும் நாளாக மாற்றியவர் தலைவர் கலைஞர். தன்னுடைய கண் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதுகூட, அவர் தன்னுடைய கண்களைப் பற்றியே மட்டும் யோசிக்கவில்லை. 'எனக்கே இப்படி ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது; இதேபோல் பாதிக்கப்படக்கூடியவர்கள் இன்னும் எத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்' என்று சிந்தித்தவர் அவர். அந்த உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் கண்ணொளித் திட்டத்தைக் கொண்டு வந்தார் தலைவர் கலைஞர்.

இப்படி ஒவ்வொரு நாளும் எத்தனையோ திட்டங்களை தன் ஆட்சி காலத்தில் எண்ணி அடக்கிவிட முடியாத திட்டங்களை எல்லாம் தந்த தலைவர் கலைஞர். அதே வழியிலேதான் நம்முடைய முதலமைச்சராக இருந்த அண்ணன் தளபதி அவர்கள் காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினார்.

ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் திட்டங்கள் வெறும் தேர்தல் வாக்குறுதிகளோ, தற்காலிக உதவிகளோ அல்ல. அவை உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கல்வி கற்று, நல்ல நிலையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்; ‘எனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்ற கனவோடு வாழ வேண்டும்; சுயமரியாதையுடன் வாழக்கூடிய உரிமை எனக்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள்.

என்னுடைய உரிமைகளுக்காக போராடவும், என்னுடைய மொழிக்காக போராடவும், என்னுடைய அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் எனக்கு உரிமை இருக்கிறது என்பதை இந்த மக்களுக்கு கற்றுத் தந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

அதனால், ஆட்சி பொறுப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் இந்த தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்க போட்ட பாதையில் தான் யாராக இருந்தாலும் பயணிக்க முடியும். அதை ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடியவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் கேள்வி கேட்கக் கூடாது தான் பேசும்போது குறிக்கிடக் கூடாது என்று நினைக்கக்கூடிய ஒரு தலைவர் கலைஞர் இல்லை.

இப்போது சமூக வலைத்தளங்களில் ஒரு அழகான புகைப்படம் பரவி வருகிறது. அதில் தலைவர் கலைஞர் அவர்கள் அமர்ந்திருப்பார். அவரைச் சுற்றி ஊடகத் துறையைச் சேர்ந்த நண்பர்களும் செய்தியாளர்களும் நிற்பார்கள். அந்த அறையே செய்தியாளர்களால் நிரம்பி வழியும். அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி நின்றுகொண்டு பல்வேறு கேள்விகளைக் கேட்பார்கள். 

எந்தவித தயக்கமும் இல்லாமல் ஊடகங்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த தலைவர் கலைஞர். ஆனால் இன்று, எத்தனையோ தலைவர்கள் டெல்லியிலிருந்து தமிழ்நாடு வரைக்கும் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு கூட தயாராக இல்லாத ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

மக்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுவதற்கு தயாராக இல்லாத, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு உண்மையான ஜனநாயக தலைவனின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்ற அந்த பெருமை நமக்கு அத்தனை பேருக்கும் இருக்கிறது என்று பேசினார்.

Related

“முதல்வர் விஜய்க்கு கேக் வெட்டி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை திரிஷா!”