சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார். முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மேடையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடினார்.
பரிசு வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது குறித்த கேள்விக்கு...?
பேரவைத் தலைவர் என்ற முறையில் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது பற்றி எந்த விவரமும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும், மக்கள் விரும்பும் கட்சிக்குச் செல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு என அவர் தெரிவித்தார். சனிக்கிழமை தோறும் ஆள் பிடிக்கும் வேலைகளில் தவெக ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தது குறித்த கேள்விக்கு...?

நான் தவெகவில் சேர்ந்தபோது யாரும் ஆள் பிடித்துச் சேர்க்கவில்லை, நானாகவே விரும்பித்தான் சேர்ந்தேன் என்றார். மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு இன்னொரு எம்.ஜி.ஆரைத் தேடினேன். என் ஏக்கத்தை போக்குகிற மாபெரும் தலைவராக தளபதி விஜயைப் பார்த்து நானாகத்தான் போய்ச் சேர்ந்தேன் என அவர் தெரிவித்தார்.
மேலும், லஞ்சமற்ற, வெளிப்படையான அரசாங்கத்தை மக்கள் விரும்புவதாகவும், தளபதி விஜயின் தலைமையில் அப்படிப்பட்ட அரசாங்கம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஆள வந்திருக்கும் புதிய அரசுக்கு அவகாசம் தர வேண்டும் என்றும், அறிவித்திருக்கும் திட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் கூறினார். கடந்த காலங்களில் ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது சர்ச்சையானது குறித்த கேள்விக்கு...?
வரும் 18ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் போது நீங்களே வந்து பாருங்கள் என அவர் தெரிவித்தார். மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அரசு சார்ந்தவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று கொங்கு ஈஸ்வரன் கூறிய கருத்துக்கு...?
கொங்கு ஈஸ்வரன் கருத்தை நான் மனதில் வைத்துக் கொள்கிறேன் என்றும், காலையில் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றும், மாலையில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவதற்கு அழைத்தார்கள், அங்கேயும் கலந்து கொண்டேன் என்றும் கூறினார். கொங்கு ஈஸ்வரன் அந்தக் கூட்டத்தில் வந்து என்னுடைய பேச்சைக் கேட்டிருந்தால், நான் எப்படிப்பட்ட கருத்துக்களை உள்ளத்தில் வைத்திருக்கிறேன் என்பதைத் தெரிந்திருக்க முடியும். இருந்தாலும் அவர் சொன்ன கருத்தை நான் மனதில் வாங்கிக் கொள்கிறேன் என அவர் கூறினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.