சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனை வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடும் அறிக்கை: முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எ.வ.வேலு அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் டிவிஏசி என்னும் கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குனரகம் மேற்கொண்டுள்ள சோதனைகள், “ஊழல் ஒழிப்பு நடவடிக்கை” என்ற போர்வையில் நடைபெறும் வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கும், அமைப்பாற்றலும் கொண்ட தலைவர்களை அரசியல் ரீதியாக முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஒன்றிய மற்றும் மாநில ஆட்சிகள் பல்வேறு விசாரணை அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கவும், அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும், ஜனநாயகத்தை விசாரணை அமைப்புகளின் மூலம் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு ஜனநாயக நாட்டில் சட்ட அமலாக்க அமைப்புகள் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் இன்று ஒன்றிய அமலாக்கத்துறை (ED) வருமானவரித் துறை, மத்திய புலனாய்வு துறை (சிபிஐ), டிவிஏசி போன்ற அமைப்புகள் அரசியல் அதிகார மையங்களின் கட்டளைக்கிணங்க செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் வலுப்பெற்றுள்ளது. 

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

ஆட்சிக்கு எதிராக பேசுபவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள், தேர்தல் அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்கள் மட்டுமே குறிவைக்கப்படுவது இதற்கே சான்றாகும். எதிர் கட்சி கொறடா எ.வ.வேலு அவர்கள் மீது தற்போது நடத்தப்படும் சோதனைகளும் அதே அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றன. தேர்தல் அரசியலில் எதிர்கால தாக்கத்தை பலவீனப்படுத்தவும், அரசியல் மிரட்டல் சூழ்நிலையை உருவாக்கவும், “எதிர்ப்பின் விலை இதுதான்” என்ற அச்சத்தை பரப்பவும் இந்த நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மையில் ஊழலை ஒழிக்க விருப்பமிருந்தால், ஆட்சியுடன் நெருக்கம் கொண்டவர்கள் மீதும் இதே வேகத்திலும் தீவிரத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசியல் தலைவர்கள் மீது மட்டுமே இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் நடைபெறுவது, இது சட்டத்தின் ஆட்சி அல்ல; அதிகாரத்தின் பழிவாங்கும் அரசியல் என்பதை வெளிப்படுத்துகிறது.

அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்க விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். தமிழகம் எப்போதும் அதிகார அத்துமீறலுக்கும் அரசியல் அடக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுத்த மண்ணாகும். மிரட்டல்களாலும் சோதனைகளாலும் அரசியல் குரல்களை மவுனப்படுத்த முடியாது.இந்த அரசியல் வேட்டையாடும் போக்கை மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அதிகாரம் நிரந்தரமல்ல; ஆனால் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

Related

“கிருஷ்ணகிரி  4 மசார் தர்காவில் 13-ம் ஆண்டு மொகரம் விழா”