சென்னை: சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: 

ஒரு செய்தி விளம்பரத்துறை அமைச்சர் என்ற முறையில், இந்த மாமன்றத்தில் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்ன சில செய்திகளுக்கு சில வரி விளக்கங்களை உங்கள் மூலமாக வழங்க விரும்புகிறேன். தன்னுடைய பேச்சில், மாண்புமிகு எதிர்க்கட்சிஙம தலைவர் அவர்கள் சில விளக்கங்களை ஆக்கப்பூர்வமாக ஆதாரத்தோடு கூறியிருந்தால் அதை குறிப்பெடுத்து அதன்படி இந்த தமிழ்நாடு அரசு தன்னுடைய திசைவழி போக்கை சரியான முறையில் செலுத்திக் கொள்ள தயாராகத்தான் இருக்கிறது. 

நான் முதல்வன் திட்டத்தை முடக்குவதற்கோ, மாற்றுவதற்கோ எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை. ஆனால் சில விஷயங்களை தெளிவுப்படுத்த வேண்டும். 40 நாள் விரதம் முடிப்பது போல 40 நாட்கள் ஆட்சியை இந்த தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவு செய்திருக்கிறது. இந்த 40 நாட்களும் பார்த்துவிட்டேன் ஏமாற்றம் மட்டும்தான் மிச்சம் என்று அவர் சொன்னார். ஆனால், மக்கள் திமுக-வினுடைய 40 நாள் அல்ல ஐந்தாண்டுகளையும் பார்த்துவிட்டு வந்த ஏமாற்றத்தால் தான் இப்படி ஒரு தீர்ப்பை எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். ஆளுநர் மகிழ்ச்சி, அமைச்சரவை மகிழ்ச்சி, என்றெல்லாம் சொன்ன இந்த அரசில் தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைதான் இன்றைய சட்டமன்றத்தினுடைய போக்கு காட்டுகிறது.

நான் முதல்வன் திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடியவர்களை நான் முதல்வன், நான் முதல்வர் என சொல்ல வைத்துவிட்டு ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் முதல்வர்கள் வந்து கொண்டிருக்கின்ற போக்கை மாற்றுவதற்காகத்தான் இப்படி ஒரு சட்டமன்றம் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு வரலாற்றில், முதல் முறை முதலமைச்சர் மட்டுமல்ல, மாண்புமிகு சி ஜோசப் விஜய் அவர்கள் முதல் முறையிலேயே முதலமைச்சராகி இருக்கிறார். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன்.

நிதி ஆயோக் கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் சொன்னதெல்லாம் 40 நாட்கள் நீங்கள் செய்திருக்க முடியாது. அது திமுக தான் காரணம் என்று சொன்னார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன். இன்று அவர் சொன்ன சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள், எல்லா பிரச்சனைக்கும் ஐந்தாண்டு காலமாக அவர்கள் செய்த திமுக ஆட்சிதான் காரணமாக இருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டிக் கொள்கிறேன். ஒரு கல்வித்துறை அமைச்சர் நான். பள்ளி மாணவர்களுடைய புத்தகப் பையிலே அன்றைய முதல்வர் ஸ்டாலின் படத்தை நாங்கள் போடவே இல்லையே என்று பெருமையாக சொன்னார். அப்புறம் ஏன் சார் லேப்டாப்பில் மட்டும் அந்தஙப படத்தை போட்டீர்கள்? நீங்கஙள லேப்டாப்பில் போட்ட படத்தை எங்கள் மாணவர்கள் தின்னர் வைத்து அழித்துவிட்ட காட்சிகளும் சமூகவலைதளத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கோவில் பிரச்சனையை ஒரு வரியில் சொல்கிறேன். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரினுடைய வசனத்தையே சொல்கிறேன். நாங்கள் கோவில் கூடாது என்று சொல்லவில்லை - கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.

தூய்மைத் தொழிலாளர்களை முன்னாள் முதல்வர் பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள். எங்கள் கேள்வியே அதுதான். 10 நாட்கள் ஒரு வாய் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தபோது நானும் எனது சகோதரர்கள் அண்ணன் ஆனந்தும், மாதவும் போய் பார்த்தோமே. இன்று தூய்மை தேவதைகளை பார்க்கின்ற திரு.ஸ்டாலின் அவர்கள் அன்றைக்கு ஏன் சார் பார்க்கவில்லை? ரிப்பன் மாளிகைக்கு அட்ரஸ் தெரியலையா? எப்படி போக வேண்டும் என்ற பாதை தெரியவில்லையா?

தமிழ்நாடு எத்தனையோ திருடர்களை பார்த்திருக்கிறது. அலிபாபாவும் 40 திருடர்களையும் கூட பார்த்திருப்பீர்கள். அலிபாபாவும் ஃபியூஸ் கேரியர் திருடர்களையும் இப்போதுதான் எங்களுடைய மின்சாரத்துறை அமைச்சர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதை குறித்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் மின்வெட்டை குறித்து சொன்னதற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இதே மாமன்றத்தில் சொன்ன ஒரு வரியை சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். இந்த மாமன்றத்திலே

தமிழ்நாட்டிற்கு மின்சார தடையை அறிமுகம் செய்த திமுக எதற்கு மின்சார தடையை பற்றி பேசுகிறது என்று அவர் கேட்டார். கலைஞர் வண்ண தொலைக்காட்சி கொடுத்தார்கள் அந்த நாட்களை பார்க்க முடியாது. கலைஞர் வண்ண தொலைக்காட்சி கரண்ட் இல்லாமல், கருப்பு வெள்ளையாக போன அந்த காலங்களை எல்லாம் மறந்துவிட்டு ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறமான செய்திகளை மாமன்றத்தில் அவர்கள் சொல்வதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நேரலையை குறித்து கேட்டார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மூன்றாண்டு காலமாக ஒரு தொழில்நுட்பக் கோளாறாக அன்றைய சபாநாயகர் நேரலையை இருட்டடிப்பு செய்துவிட்டார். ஆனால், இன்று மாண்புமிகு சபாநாயகர் நேரலை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எங்கள் சார்பாகவும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

விவசாயிகள் குறித்து இந்த மாமன்றத்தில் ஒன்று சொல்கிறேன். தமிழ்நாடு வரலாற்றிலேயே விவசாயிகளினுடைய சங்கத்தின் தலைவர்கள் மீது குண்டாஸ் போட்ட ஒரு சர்க்கார் திமுக சர்க்கார். ஆனால், அவர்கள் கண்ணீரை போக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளில் எந்த கட்சிக்காரர்களும் அது தமிழக வெற்றிக்

கழகத்தினர்களாக இருந்தாலும் சரி, பள்ளி மாணவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொன்னதோடு மட்டுமல்ல - பெருமையோடு சொல்கிறேன். எங்கள் கட்சியினுடைய ஒன்றிய செயலாளர் அரசு பள்ளியில் சென்று ரீல்ஸ் எடுத்ததற்காக நேற்றைய தினம் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் என்னுடைய பொதுச்செயலாளர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பற்றி பேசுகிறவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நினைவுக்கு வரவில்லையா? அண்ணா நகரில் பெற்ற பிள்ளைக்கு கொடுமை நடந்ததற்கு புகார் வழங்க அப்பா அம்மா மீது அடித்து துன்புறுத்தியது நினைவுக்கு வரவில்லையா? யார் அந்த மேலிடம் என்று கேட்பவர்களுக்கு யார் அந்த சார்? என்பது நினைவுக்கு வரவில்லையா?

என்பதை உங்கள் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். இடையில் ஆங்கிலத்தில் ஒரு விஷயம் - I want to quote Voltaire. I may not agree with what was saying but I am ready to give my life to defend your right to say it. எதிர்க்கட்சிகளினுடைய கருத்துக்களையும் அரவணைக்கக்கூடிய மாமனிதர் இந்த மன்றத்தில் முதல்வராக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை சொல்வீர்கள் என்று பார்த்தால் திரும்ப திரும்ப அரசியல் விமர்சனங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சோஃபா கதையை என்றைக்கு விடப்போகிறார்கள். எங்கள் தலைவர் சினிமாவை விட்டாலும் அவர்கள் அட்லி என்கிறார்கள், புஷ்பா என்கிறார்கள், ஜீராசிக் பார்க் என்பார்கள் போல் இருக்கிறது. நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். அந்த சோஃபா அவர்கள் வாங்கியது அவர்களினுடைய வசதி கருதி வாங்கியது.

மதிப்பிற்குரிய அண்ணன்களே, நீங்கள் சிறுமைப்படுத்தக்கூடாது. ஆனால் ஒன்று உறுதி. எந்த காரணம் கொண்டும் பார்க்க வருகிற கூட்டணி தலைவர்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேர் போட்டதைப் போல சிறுமைப்படுத்தக்கூடிய கட்சி தமிழக வெற்றிக்கழகம் இல்லை என்பதையும் இந்த நேரத்தில் நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன். சிங்கப்பெண்களை குறித்து அன்றே விரிவாக, தெளிவாக, அழகாக நான் கூறிவிட்டேன். 

சிங்கப்பெண்கள் இந்த நாட்டினுடைய தமிழ்நாடுஅரசினுடைய பொக்கிஷம். அவர்களை குறித்து மீண்டும் மீண்டும் இப்படி சிறுமைப்படுத்தி பேசியதற்காக மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் அதை கண்டிக்க வேண்டும். சிங்கப்பெண்களை குறித்து இனி யாராவது தவறாக பேசினால், அதை அனுமதிக்கக் கூடாது. இப்படி தவறாக பேசியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தினுடைய அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வாக்குறுதிகளை பற்றி எல்லாம் பேசினார்கள். பொதுவாக வாக்குறுதிகள் சர்வதேச அளவில் Political phenomenal எப்படி உருவாகிறது? ஒரு பிரச்சனை. அந்த பிரச்சனைக்கான ஒரு சொல்யூஷன்ஸ் அதை எந்த political interference இல்லாமல் செயல்படுத்தக்கூடிய ஒரு செயல்முறை, பின்பு வரக்கூடிய அந்த வெற்றியை ரோடு போடுவோம் என்று சொல்லி ரோடு போட்டதை காண்பித்து exhibit செய்து அவர்கள் முன்னோக்கி செல்வார்கள். ஆனால், இங்கே பொறுத்தவரைக்கும் நாம் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் ஆண்டவர்கள் பிரச்சனையை identify செய்து சொல்லவே மாட்டார்கள். ஏன் தெரியுமா? அந்தப் பிரச்சனையே அவர்கள்தான். 

அவர்களை identify செய்து எப்படி சொல்ல முடியும்? சரி அதற்கு possible solutions சொல்லி political interference இல்லாமல் அதை செயல்படுத்த முடியுமா? ஒரு முனிசிபல் கவுன்சிலர் தொடங்கி மாண்புமிகு அமைச்சரினுடைய வீட்டில் இருக்கிறவர்கள் வரைக்கும் கமிஷன் மீது கமிஷன் அடித்து அந்த ப்ராஜெக்ட்டே முடியாது. கடைசி எதை விளம்பரம் செய்வது? அந்த திட்டத்தினுடைய வெற்றியையா? எதை விளம்பரம் செய்வது என்று தெரியாமல் தங்கள் தலைவரை அதுவும் ஒரு குடும்பத்தை மட்டுமே வெறித்தனமாக விளம்பரம் செய்து செய்தி விளம்பர துறையின் கஜானாவையே துடைத்து விட்டு சென்றிருக்கிறார்கள் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரியப்படுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்னும் ஒவ்வொரு வரியிலும் ஆக்கப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக எதையாவது சொல்வார்களோ நான் தேடி தேடி பார்த்தேன். அவர் 40 நாட்கள் தேடி பார்த்து ஏமாற்றம் அடைந்தார். நான் 40 நிமிடத்திலே ஏமாற்றம் அடைந்து விட்டேன். இதைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு நகைச்சுவை காட்சி சொல்வது போல, அதில் ஒன்றுமே இல்லை. கீழே போட்டுவிடுங்கள். 

Related

“புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது: நீர்வளத்துறை அமைச்சர்‌ என். ஆனந்த்”