சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் மீது முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 25.4.2015 அன்று பாரத பிரதமரை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்தினை கர்நாடக அரசு செயல்படுத்தக் கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தும்படி கோரி விளக்கமான கடிதத்தை அளித்தார்.
மேகதாது அணை உட்பட காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் இசைவு பெறாமலும், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்ட சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும்
தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என 18.8.2016 அன்று இம்மாமன்றத்தில் 10வது விதியின் கீழ் உறுதிபட தெரிவித்தார்கள். 2017 முதல் செப்டம்பர் 2017 வரை இறுதி கட்ட வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றன. இதில், கர்நாடக அரசு 9 நாட்களும், கேரள அரசு 2 நாட்களும், தமிழ்நாடு அரசு 13 நாட்களும், புதுச்சேரி மற்றும் மத்திய அரசு தலா ஒரு நாளும் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தன.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், 16.2.2018 அன்று தனது தீர்ப்பினை வழங்கியது. இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: -பன்மாநில நதிகள் தேசிய சொத்து எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்ற நவம்பர், 1991-ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்றத்தின் கருத்து இத்தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
1892 மற்றும் 1924-ஆம் ஆண்டைய ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்ற கர்நாடகாவின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கர்நாடக அரசு, தமிழ்நாட்டின் பாசன பரப்பான 24.708 லட்சம் ஏக்கர் என்பதை 21 லட்சம் ஏக்கர் என குறைக்க வேண்டுமென நடுவர் மன்றத்தின் முன் வாதிட்டது. இதனை காவேரி நடுவர் மன்றம் ஏற்றுக்கொள்ளாமல் தமிழ்நாட்டின் பாசனப்பரப்பு 24.708 லட்சம் ஏக்கர் என அதன் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்த ஆணைக்கு பாதகம் ஏதும் இல்லாமல், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, மாதாந்திர அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மேகதாது திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நமது நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரும், பின்னரும், 25.2.2017, 27.2.2017, 4.9.2018, 8.10.2018 மற்றும் 22.412018 ஆகிய நாட்களில் நான் முதலமைச்சராக இருந்தபோது, பாரதப் பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாக சந்தித்தும், அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளேன்.
மேலும், 5.7.2017 மற்றும் 23.14.2017 ஆகிய நாட்களில் மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்தும், கடிதங்களின் வாயிலாகவும் கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளேன்.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவை உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக 14.75 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகாவிற்கு கூடுதலாக அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கென 67 டி.எம்.சி. அடி நீர் கொள்ளவு கொண்ட மேகதாது அணையை கட்ட கர்நாடகா முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும்.
எனவே, இவ்வணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமும், உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில், கடந்த காலங்களைப் போலவே காவேரி நீரை முழுமையாக தனது உபயோகத்திற்காகவே கர்நாடகா பயன்படுத்தும் நிலை உருவாகும்.
14.2.2024 அன்று சட்டமன்றத்தில் நான், எங்களது ஆட்சிக் காலத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும், 2018-ஆம் ஆண்டு மேகதாது அணை குறித்த பிரச்சனை மத்திய நீர்வள கமிஷனின் பார்வைக்குச் சென்றபோது, எனது அரசு 5.12.2018 அன்று மத்திய நீர்வள கமிஷனின் அன்றைய இயக்குநர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது என்றும், இன்னும் அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் திமுக அரசு தொடர்ந்து நடத்திட வலியுறுத்தியதோடு, தமிழக நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தினேன்.
சிவகுமார் அவர்கள், 16.2,2024 கர்நாடக பட்ஜெட்டில், காவிரி ஆற்றின் _ குறுக்கே மேகதாது அணை கட்ட பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்தார். அனைத்திந்திய அண்ணா திமுகசார்பில் இதை அப்போதே கடுமையாக எதிர்த்ததுடன் அப்போதைய திமுக அரசை உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட, தயாரித்து அனுப்பிய திட்ட அறிக்கையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசு திருப்பி அனுப்பிய நிலையில், மத்திய அரசு குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து 12.6.2026 அன்று கர்நாடக முதலமைச்சர் அவர்கள் சுற்றுச் சூழல் அனுமதியைப் பெற, மாண்புமிகு பாரதப் பிரதமரிடம் மீண்டும் நேரில் !ஒரு அறிக்கையை வழங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. !
இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக தற்போதைய கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணைகட்ட முழு மூச்சுடன் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
நீண்ட, நெடுங்கால சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் நிலைநிறுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமையையும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், 20 மாவட்டங்களுக்கும் மேலாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவேரி ஆற்றில் நமக்குள்ள உரிமையை பேணிக் காக்க வேண்டியது நம் எல்லோரின் கடமையாகும்.
கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்றம் 5,2.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பை மதிக்காமலும், 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி
தீர்ப்பையும் மதிக்காமல், தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததும், திருத்திய தொழில்நுட்ப திட்ட அறிக்கையை மீண்டும் இம்மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது கண்டிக்கத்தக்கது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அரசின் தனித் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கின்றோம். எனப் பேசினார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.