சென்னை: சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்தவர். இயக்குநர், நடிகர் கே. பாக்யராஜ் அவர்கள். தூத்துக்குடியில் நான் இருந்தபோது சார்லஸ் தியேட்டரில் தூறல் நின்னு போச்சு, சின்னவீடு, சுந்தர காண்டம் போன்ற படங்கள் ரிலீஸ் ஆனது. ராஜ் தியேட்டரில் ஆராரோ ஆரிராரோ, எங்க சின்ன ராசா படம் செமயா ஓடியது. பவுனு பவுனுதான் பாலகிருஷ்ணாவுல 50 நாட்களுக்கு மேல் ஓடியது. தூத்துக்குடி பாக்யராஜ் ரசிகர் மன்ற தலைவர் எனது மச்சான் அப்துல் லத்தீப்பின் நண்பர் சூரி (சூர்யா). பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தார். மாப்ளை நாளை பாக்யராஜ் வராரு... ரயில்வே ஸ்டேசனுக்கு வந்துருன்னாரு... காலையிலேயே ரயில்வே ஸ்டேசன் சென்று வரவேற்றோம். 

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அவர் ரயிலில் இறங்கியபோது மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது. ஸ்டேசனை விட்டு வெளியே வந்த போது மழை தூரலாக பெய்து கொண்டிருந்தது. அப்போது அவருக்கு குடை பிடிக்க முயன்ற போது வேண்டாம் என நனைந்து கொண்டே வந்தார். அதற்குள் தூறல் நின்னுபோச்சு.... அந்தக் காட்சிகள் இன்றும் நினைவலைகளாய் உள்ளது.

அதே இயக்குநர் பாக்யராஜ் அவர்களுடன், வேந்தர் டிவியில் ஒன்றாக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வேந்தர் டிவிக்காக அவர், நிகழ்ச்சி தொகுப்பாளராக அடிக்கடி அலுவலகம் வருவார். அவர் ஓரிரு வார்த்தைகள் எங்களிடம் பேசுவார். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரது நடிப்பு, கதை, வசனம், எதார்த்தமான பேச்சு யாருக்கும் வராது. 

எனது நண்பர் சினிமா செய்தியாளர் கார்த்திக் சாரிடம் சொல்வேன்...சார் என்னோட தாய்த்தமிழ் பத்திரிகை விழாவுக்கு பாக்யராஜ் சாரை அழைக்கணும் சார்.... இதுதான் என் லட்சியம் என்பேன். அவரோ, கண்டிப்பாக அழைக்கலாம் சார். பத்திரிகையாளருக்காக உடன் ஓடி வருவார் என்றார். அந்தக் கனவு நனவாகவில்லை. 

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்து, ரஜினி-கமல், கே.பாக்யராஜ்- டி.ராஜேந்தர் படங்களுக்கு போட்டியாக இருந்தது. சினிமாவில் மட்டுமல்ல... பத்திரிகை ஆரம்பித்ததிலும் டி.ஆருக்கும், பாக்யராஜுக்கும் போட்டி இருந்தது. அவர் உஷா என்ற என்ற வார இதழை நடத்தினார். பாக்யராஜ் சார், பாக்யா இதழை நடத்தினார். பாக்யா இதழில் வரும் அவரது கேள்வி பதில்கள் பக்கம் அவ்வளவு சுவராஸ்யமாக இருக்கும்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு இவர் மனதை மிகவும் பாதித்திருக்கக் கூடும். ஆசான் போன.. அதே மாதத்தில் இவரும் விடை பெற்றுக் கொண்டார். அவரது நகைச்சுவை... இன்று கண்ணீரால் நனைகிறது. 

- க.செய்யது அப்துல் கனி, ஆசிரியர், தாய்த்தமிழ்.

Related

“ATTACKER திரைப்பட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!”